×

குழந்தை திருமணம் குறித்த கவர்னர் கருத்துக்கு கண்டனம்

*ஜனநாயக மாதர் சங்க மாநில குழு கூட்டத்தில் தீர்மானம்

குலசேகரம் : அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு கூட்டம் திற்பரப்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநிலத் தலைவர் வாலண்டினா தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி, மாநில துணைத் தலைவர் பாலபாரதி, அகில இந்திய துணைச் செயலாளர் சுகந்தி, மாநிலச் செயலாளர் ராதிகா, மாநிலப் பொருளாளர் பிரமிளா, மத்தியக் குழு உறுப்பினர்கள் பொன்னுத்தாய், சசிகலா, மாவட்டத் தலைவர் மேரிஸ்டெல்லாபாய், செயலாளர் ரெகுபதி, மாநிலக்குழு உறுப்பினர்கள் லீமாரோஸ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் குமரி மாவட்ட மகளிர் காவல் நிலையங்களில் போதிய போலீசார் மற்றும் விசாரணை அதிகாரிகள் இல்லை. எனவே தக்கலையை மையமாகக் கொண்டு அனைத்து மகளிர் காவல் நிலையம், குலசேகரத்தில் மகளிர் காவல் நிலையம், திற்பரப்பில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

தமிழக கவர்னராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அபத்தமான சனாதன கருத்துக்களை கூறி வருகிறார். குறிப்பாக இந்திய நாட்டில் வரலாற்று, போராட்டங்கள், அதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெரிந்து கொள்ளாமல் வரலாறுகளை புறந்தள்ளி சனாதன கருத்துக்களை பரப்பி வரும் பணிகளை செய்து கொண்டிருக்கிறார். அவரது கருத்துக்கள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நிலையை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது.

100 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட குழந்தை திருமணத்தை ஆதரித்து பொதுநிகழ்வில் கருத்துக்களை பதிவு செய்திருப்பதோடு, தனது திருமணமும் ஒரு குழந்தை திருமணம் எனவும், இது ஒன்றும் தவறில்லை எனவும் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் தனது கருத்துக்கு தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பைக் கோர வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

40 டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்

அகில இந்திய மாதர் சங்க துணை தலைவர் வாசுகி நிருபர்களிடம் கூறியது: போதை பழக்கத்திற்கு எதிரான பிரசாரத்தை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். இப்போது கல்வி நிலையங்கள் அருகில் உள்ள 500 கடைகளை மூடுவதாக கூறியுள்ளனர். நாங்கள் ஆய்வு செய்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொடுத்துள்ள 40 கடைகளையும் உடனடியாக மூட வேண்டும். முதியோர் மற்றும் விதவை பென்ஷன் சரிவர வழங்கப்படாத நிலை காணப்படுகிறது.

இதனை சரி செய்ய வேண்டும். குத்துச்சண்டை வீரர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வரும் 15ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் என அமைச்சர் கூறியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து பிரதமர் ஜனநாயகம், ஜனநாயகம் என்று பேசும் போது அதற்கு சற்று அப்பால் போராடிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக போராடிய எங்களின் மாதர் சங்க தலைவர்கள் உள்ளிட்டோர் போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். போக்சோ வழக்கு தாக்கல் செய்யப்பட்ட ஒருவர் பா.ஜ எம்பி என்பதால் அவரை கைது செய்யவில்லை. இந்த விசயத்தில் பிரதமர் மோடி மவுனத்தை கலைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post குழந்தை திருமணம் குறித்த கவர்னர் கருத்துக்கு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Janayaka Matar Sangh ,Kulasekaram ,All India Democratic Matar Sangh ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...